Main Menu

இலங்கையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: மக்களுக்கான அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இன்றைய நிலைவரப்படி 10 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இந்து மக்கள் முடிந்தளவு அதிக கூட்டமாக கோயில்களுக்குச் செல்வதனைத் தவிர்த்து வீட்டில் இருந்து வழிபடுமாறு கோரப்பட்டுள்ளது. இந்து கலாசார திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்றிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொழும்பு மற்றும் சிலாபம் மறைமாவட்டங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகளை இரத்துச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தவக்காலத்தில் விசேட யாத்திரை நிகழ்வுகளை நிறுத்துவதன் ஊடாக, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறையிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்திற்கொண்டு கைதிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் சிறைக்கைதிகளைப் பார்வையிட மூவருக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இன்று முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கலாசார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழுள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன.

இதற்கமைய, தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்தின் கீழுள்ள தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சி சாலை, ரிதியகம சபாரி பூங்கா என்பன நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன.

பகிரவும்...