Main Menu

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை- வர்த்தக சங்கம் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் தங்கு தடையின்றி பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக குடாநாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் வர்த்தக சங்கம் ஊடக சந்திப்பொன்றை இன்று (சனிக்கிழமை) நடத்தியுள்ளது.

இச்சந்திப்பில் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
01. தற்போதைய நிலையில் வர்த்தகர்கள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை திருப்திகரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

02. வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்வோர் தொடர்ந்தும் பொருட்களை விநியோகம் செய்யுமிடத்தில் பொதுமக்களுக்கான பொருட்கள் விநியோகத்தை யாழ் வர்த்தகர்கள் சிறந்த முறையில் மேற்கொள்வார்கள்.

03. தற்போதைய நிலையில் கொழும்பில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் குடாநாட்டிற்கு பொருட்களை கொண்டு வருவதும் குடாநாட்டிலிருந்து பொருட்களை கொண்டு செல்வதும் எந்த தங்குதடையுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

04. கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான முறையில் பொருட்களை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் வர்த்தகர்கள் இரவிலும் தங்கள் வர்த்தக நிலையங்களை நீண்டநேரம் திறந்து அவர்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

05. பொதுமக்கள் திடீரென அளவுக்கதிகமான பொருட்களை கொள்முதல் செய்வதனால் வர்த்தக நிலையங்களில் ஏற்கனவே இருக்கும் கையிருப்புக்களை விட மேலதிகமான பொருட்கள் தேவைப்படுகின்றது. இதன் மூலம் வர்த்தகர்கள் சில நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றார்கள். இது ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆகையால் பொதுமக்கள் அளவுக்கதிகமான பொருட்களை கொள்முதல் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

06. பொதுமக்கள் பொருட்களை கொள்முதல் செய்யும்போது நீண்டகாலம் பழுதடையாமல் வைத்துப் பாவிக்கக் கூடியதான உலர் உணவுகளை கொள்முதல் செய்வது சிறந்தது.

07. பொதுமக்கள் விரைவில் பழுதடையக் கூடிய அல்லது காலவதியாகக் கூடிய பொருட்களை கொள்முதல் செய்வது அவர்களுக்கு பெரிய பாதிப்பபையும் நஷ்டத்தையும் ஏற்படுத்த வழிவகுக்கும்.

08. அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் தொடர்பில் தனியார் துறையினரே தற்போது முக்கிய விநியோகப் பணியை செய்து வருகின்றார்கள். ஆகையால் அந்தபணியை பொதுமக்களுக்கு தொடர்ந்தும் சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு வர்த்தகர்கள் அக்கறையுடனும், பொறுப்புடனும் செயற்படுவார்கள்.

09. பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தின் பெரும்பகுதி தனியார் துறையினரிடமே தங்கியிருப்பதால் அனைத்து தனியார் துறையினரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் செயற்படுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், மருந்து வகைகள், அரிசி வகைகள் மற்றும் ஏனைய பொருட்கள் விநியோகஸ்தர்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பொருட்களை போதிய கையிருப்பினைப் பேண வேண்டுமெனவும், பொதுமக்களுக்கான பொருட்களை எந்த சூழ்நிலையிலும் தட்டுப்பாடின்றி விநியோகிக்க தயார் நிலையில் இருக்குமாறும் வர்த்தகர்கள், மருந்தக உரிமையாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்களை அறிவுறுத்தியுள்ளது.

பகிரவும்...