Main Menu

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து கனடா பிரதமரிடம் தமிழ் செயற் பாட்டாளர்கள் முக்கிய கோரிக்கை!

இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாவில் சில சட்ட ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சட்டக் கோட்பாட்டு மாற்றங்களைச் செய்துதர வேண்டுமென கனடாவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்படி, இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதை தடுக்கும் சட்டக் கோட்பாட்டை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நீக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய சட்டக் கோட்பாட்டை நீக்கினால் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் கட்டாயமாக காணாமல் போனவர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் பலனளிக்கும் என தமிழ் செயற்பாட்டாளர் குமணன் குணரத்னம் கடந்த திங்களன்று நாடாளுமன்ற செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்களால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மத்திய அரசாங்கத்துக்கும் தனி தமிழ் அரசை நிறுவப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் 1983 முதல் 2009 வரை உள்நாட்டுப் போர் நடைபெற்றது.

இந்நிலையில், 1980களின் பிற்பகுதியிலிருந்து இலங்கையில் குறைந்தது 60 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை மதிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டது.

இது அனைத்து மனிதர்களையும் ஆழமாக கவலைப்பட வைக்கும் ஒரு பிரச்சினையாகும். இந்நிலையில் இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதை தடுக்கும் சட்டக் கோட்பாடு பெரும்பாலும் பிற நாடுகளில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து அரசாங்கங்களைப் பாதுகாக்கிறது. இந்நிலையில் குறித்த சட்டக் கோட்பாடு அகற்றப்பட வேண்டும்” என குனரத்னம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த சட்டக் கோட்பாடு உள்ளபோதும் ஒரு நாட்டு அரசானது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றுக்கு விதிவிலக்குகள் உள்ளன. இந்நிலையில், வணிகப் பரிவர்த்தனைக்காக அதனை அகற்ற முடியுமானால், சர்வதேச குற்றங்களுக்காக அதை ஏன் அகற்ற முடியாது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உலகெங்கிலும் குறைந்தது 85 நாடுகளில் மோதல்கள் அல்லது அடக்குமுறைக் காலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் மறைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனவே, இத்தகைய சட்டக் கோட்பாட்டை நீக்கினால் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இது பலனளிக்கும்.

இந்நிலையில், காணாமல் போவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் கீழ் நிறுவப்பட்ட குழுவிற்கு கனடா, இலங்கையை பரிந்துரைக்க வேண்டும் என குறித்த தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பகிரவும்...