Main Menu

இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும் – அமெரிக்கா

நாட்டின் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பென்டகன் துணை செயலர் எலன் எம்.லார்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் “இந்தியா ஐடியாஸ் சம்மிட்” என்ற மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா உட்பட முக்கிய நட்பு நாடுகளுக்கு  அமெரிக்கா  இராணுவ தளவாடங்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறது.

இந்த விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே  எங்களின் முக்கிய பணியாக உள்ளது.கடந்த  10 ஆண்டுகளில்  அமெரிக்கா,  இந்தியாவுக்கு விநியோகம் செய்துள்ள இராணுவ தளவாடங்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு  விற்பனையின் அளவு  1.5 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது மிகப் பெரிய வளர்ச்சியாகும்.நாட்டின் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய  இந்தியாவிற்கு  அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில்  பாதுகாப்புத் துறையில் உள்ள ஒத்துழைப்பு  கடந்த  இரண்டு ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு  இரு நாட்டு அரசுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுவடைய செய்துள்ளது. இது இந்திய-பசுபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...