Main Menu

தமிழர் பிரதேசங்களிலேயே தமிழர்களை சிறுபான்மையினராக்கும் முயற்சி நடக்கிறது- சத்தியலிங்கம்

வன்னி தேர்தல் தொகுதி உட்பட தமிழர் பிரதேசங்களில் தமிழர்களின் இனப் பரம்பலையும் இன விகிதாசாரத்தினையும் மாற்றி இந்த பிரதேசத்தில் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வருகின்ற தமிழர்களை சிறுபான்மையினராக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள குறிசுட்டகுளத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “வவுனியா பிரதேச செயலகம் அல்லது பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், 2009ஆம் ஆண்டு வரை எந்தவொரு மாற்று இனத்தவர்களும் வாழாத பிரதேசமாக இருந்தது. குடியேற்ற நடவடிக்கை ஊடாக வவுனியா வடக்கு எங்களது கைகளிலே இருந்து பறிபோகின்ற நிலை உருவாகியிருக்கின்றது.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்குப் பிரதேச சபையில் இருக்கின்ற மொத்த உறுப்பினர்கள் 26 பேரில் 10 பேர் வேற்று இனத்தவர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் வரை நூறு வீதம் தமிழர் வாழுந்த இப்பிரதேசத்தில் இந்த மண்ணுக்கு சொந்தமில்லாதவர்கள் இப்போது இருக்கின்றனர். வேறு மாகாணங்களில் இருந்து பெரும்பான்மையின மக்களை இங்கு கொண்டுவந்து குடியேற்றியுள்ளார்கள்.

இதேபோல், முல்லைத்தீவிலும் ஐந்து பிரதேச செயலகங்கள் இன்று ஆறு பிரதேச செயலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் ஒவ்வொரு பகுதிகளை இணைத்து யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் வேற்று பிரதேசத்தவர்களை குடியேற்றி அதனை அநுராதபுர நிர்வாக எல்லைக்குள் வைத்து அவர்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்துவிட்டு அந்தப் பிரதேசத்தை வெலிஒயா பிரதேச செயலாளர் பிரிவாக மாற்றி தற்போது முல்லைத்தீவுடன் இணைத்துள்ளனர்.

இவற்றையெல்லாம் செய்வதற்கு அவர்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட ஆயுதம் மகாவலி எல் வலயம். இன்னும் எங்கள் பிரதேசத்திற்கு மகாவலி நீர் வரவில்லை. ஆனால் கொண்டுவருவதாகக் காட்டி மகாவலி அதிகார சபைக்குக் கீழ் இக்காணிகளை எடுத்து அந்த அதிகார சபைக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் எங்கள் மக்களின் காணிகளை பறிமுதல்செய்து வேறு இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் ஒரேயொரு வழி, சட்ட ரீதியான போராட்டத்திற்குச் செல்வதேயாகும். அந்த வகையிலே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

வவுனியா வடக்கு ஊஞ்சல்கட்டி பிரதேசம் முற்றுமுழுவதாக இன்று பறிபோகியிருக்கின்றது. அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியவில்லை. அப்பகுதியில் குடியேற்றப்பட்ட வேற்று இனத்தவர்கள் வந்ததன் காரணமாக அவர்களே மக்கள் பிரதிநிதிகளாக மாறியிருக்கிறார்கள்.

கள்ளிக்குளம் பிரதேசத்திலும் இவ்வாறான குடியேற்றங்கள் இடம்பெற்று வவுனியா பிரதேச சபைக்கும் முதன்முதலாக சிங்கள பிரதிநிதி ஒருவர் வந்துள்ளார். தற்போது வவுனியா வடக்கில் கிபுலு ஓயா திட்டத்தைப் பற்றி பேசுகின்றார்கள். இந்தத் திட்டடத்தின் ஊடாக குடியேற்றங்களை செய்யக்கூடிய வகையில் பாரிய திட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள்.

இதேபோல், செட்டிக்குளத்திலும் அப்பிரதேசத்தை கபளீகரம் செய்து இனப் பரம்பலை மாற்றியமைப்பதற்காக அங்கு இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் தமக்கு சாதகமாக மாற்றியமைக்க நினைக்கின்றது.

வன்னி தோதல் தொகுதியில் இனப்பரம்பலையும் இன விகிதாசாரத்தினையும் மாற்றி இந்தப் பிரதேசத்தில் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வருகின்ற தமிழர்களை சிறுபான்மையினராக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆகவே, இந்த தேர்தலை நாங்கள் மிகவும் முக்கியமான தேர்தலாகப் பார்க்க வேண்டும். இன்று எங்களுக்குத் தெரியாத பல கட்சிகள் களமிறங்கியுள்ளன. ஏன் அவர்கள் வந்தார்கள்? அவர்களுக்கு இந்த மண்ணோடு எந்த சம்பந்தமும் இல்லை. மண்ணுக்காக உழைக்கவுமில்லை. அவ்வாறு இருக்கும்போது அவர்களுக்குள்ள அக்கறை என்ன?

அவர்களுக்கு நிச்சயமாக நாடாளுமன்றம் போகமாட்டோம் என்பது தெரியும். 100 வாக்குகள் பெற முடியாதவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனாலும், அவர்கள் பல கோடி ரூபாய்களை இங்கு செலவழிப்பது ஏன்? கொழும்பில் இருந்துவந்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் கோடிக்கணக்கான நிதியை செலவழித்து கூட்டங்களைப் போடுகின்றனர்.

அவ்வாறு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு 3000 ரூபாய் வரையில் பணமும் வழங்குகின்றனர். இவர்கள் கூட்டமைப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுகின்றனர்.

ஆனால், கூட்டமைப்பு பாரிய விருட்சம். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவம். ஆகவே கூட்டமைப்பை ஒழிப்பதனூடாக தமிழ் மக்களை ஒழித்து விடலாம் என எண்ணுகின்றனர்.

தமிழர்கள் தங்களுடைய நிலங்களை இழந்துகொண்டு போகின்றனர். பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது. இன அழிப்பு நடைபெறுகின்றது. இங்கு பல போர்க்குற்றங்கள் புரியப்பட்டுள்ளது. அவற்றைப்பற்றி பேச வேண்டிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சம்பந்தரின் வீட்டையும் காரையும் செருப்பையும் பற்றிப் பேசுகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

பகிரவும்...