Main Menu

இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடத்தில் இல்லை- சி.வி.விக்னேஸ்வரன்

நாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நேர்காணலில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “பயங்கரவாதிகளை நினைவில் கொள்ளவில்லை. போரில் உயிரிழந்த தங்களின் அன்பானவர்களையே நினைவு கூருகின்றனர்.

அவர்கள் யாரும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் அனைவரும் எங்கள் மகன்கள், மகள்கள், தந்தைகள், தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள், மாமாக்கள், அத்தைகள், மருமகன்கள், மருமகள், உறவினர்கள் ஆவர்.

கெப்பெடிபொல திஸாவே ஒரு சிங்களத் தலைவராக இருந்தார். அவர் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். ஆனால், அவர் இன்று ஒரு வீரன் என்று அழைக்கப்படுகிறார். அவரது நினைவாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும்கூட ஆங்கிலேயர்கள் அவரை ஒரு குற்றவாளி, பயங்கரவாதி என்று அழைத்து அவரை தேடப்படும் மனிதராக அடையாளப் படுத்தியிருந்தனர்.

ஆனால், அவர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஹீரோ. ஆகவே, தமது உரிமைகளுக்காக, தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ போராடும் எவரையும் நீங்கள் ஒரு பயங்கரவாதி என்று அழைக்க முடியாது.

நாடு முழுவதும் சிங்கள மற்றும் தமிழருக்கு சம அந்தஸ்து ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டிருந்தால், சமூகங்களுக்கிடையேயான முரண்பாடு ஏற்பட்டிருக்காது.

எதிர்காலத்தில் ஓர் இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை. ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நம் மக்களை மீண்டும் வன்முறை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...