Main Menu

இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது – காஞ்சன ஜயரத்ன!

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்த பல்வேறு தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மாகாண சபை தேர்தலை இம்முறை மாத்திரம் பழையமுறையில் நடத்தி எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்கள்.

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து எதிர்வரும் வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை முறைமையை வெள்ளை யானை என்று விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. மாகாண சபை முறைமையில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன. இதற்காக மாகாண சபை முறைமையை இரத்து செய்வது நியாயமற்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் பொதுத்தேர்தலை நடத்த முடியுமாயின் ஏன் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது.

பூகோள மட்டத்தில் தாக்கத்தை  ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் எப்போது முடிவடையும் என்று எவராலும் குறிப்பிட முடியாது. இவ்வாறான நிலையில் மாகாணசபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

மாகாண சபை முறைமையில் காணப்படும் குறைப்பாடுகளுக்கு தீர்வு கண்டு தேர்தலை விரைவில் நடத்துவது அவசியமாகும். மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

அரச நிர்வாகத்தின் ஒரு பகுதி மாகாணசபை ஊடாகவே முன்னெடுக்கப்படும். ஆகவே மாகாண சபைமுறைமை நாட்டுக்கு அவசியம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...