Main Menu

இந்து தீவிரவாதி விமர்சனம் – கமல்ஹாசன் மீது டெல்லி நீதிமன்றத்தில் ஹிந்து சேனா வழக்கு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது ஹிந்து சேனா அமைப்பு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார். 

கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஹிந்து சேனா அமைப்பு இன்று கிரிமனல் வழக்கு தொடர்ந்துள்ளது. 

தீவிரவாதத்தோடு இந்து மதத்தை தொடர்புப்படுத்தி பேசியதன் மூலம் இந்து மக்களின் மத உணர்வுகளை கமல்ஹாசன் காயப்படுத்தி விட்டதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

பகிரவும்...