Main Menu

இதுவரை 40 பேர் கைது – பல கோணங்களில் விசாரணைகள் தொடர்கின்றன

கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களுள் 26 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், 3 சந்தேகத்துக்குரியவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் பொறுப்பில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொச்சிக்கடை தேவாலயத்தில் வெடிப்பை ஏற்படுத்துவதற்காக சந்தேகநபர் பயணித்ததாக சந்தேகிக்கப்படும், சிற்றூந்து வெள்ளவத்தையில் கைப்பற்றப்பட்டநிலையில், அதன் சாரதி கைது செய்யப்பட்டார்.
அத்துடன், வெடிப்பை ஏற்படுத்திய குறித்த சந்தேகநபர் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும், வீடு பானந்துறை – சரிக்கமுல்ல பிரதேசத்தில் வைத்து சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீடும் தற்போது காவற்துறை பாதுகாப்பில் உள்ளது.
இதேவேளை, வெல்லம்பிட்டி – அவிஸ்சாவளை வீதியின் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து 9 பேர் சந்தேகத்தில் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், ஷங்கிரில்லா விருந்தகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய சீலவன் ஹின்சாம் என்பவருக்கும், தெமட்டகொட மஹவில வீட்டில் குண்டை வெடிக்கச் செய்துக் கொண்ட பெண்ணுக்கும் சொந்தமான தொழிற்சாலைகளில் பணியாற்றிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, தெமட்டகொட – மஹவில பிரதேசத்தில், வெடிப்பு இடம்பெற்ற வீட்டில் இருந்து, துப்பாக்கிகள் சில மீட்கப்பட்டுள்ளன.
குண்டு வெடிப்பு இடம்பெற்றதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட 3வரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளில் கொச்சிக்கடை மற்றும் தெமட்டகொடை வெடிப்புக்களை நடத்துவது குறித்த படங்களும், காணொளிகளும் இருந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தெமட்டகொட வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 2 வெடிப்புக்கள் இடம்பெற்ற நிலையில், 3 காவற்துறையினர் கொல்லப்பட்டனர்.
அத்துடன், குண்டை வெடிக்கச் செய்த பெண்ணும் இரண்டு சிறுவர்களின் சடலங்களும் அந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டன.
இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்லும், வாகன சாரதியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு, வாகனங்களின் முன் பகுதியில் காட்சிப்படுத்திவிட்டுச் செல்ல வேண்டும் என காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிரவும்...