Main Menu

ஆழிப்பேரலையின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் – வவுனியாவில் விசேட பிரார்த்தனைக்கு அழைப்பு

சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் விசேட வழிபாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது.

குறித்த விசேட வழிபாடு மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள், “வருடாவருடம் எமது ஒன்றியத்தினால் சுனாமியினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்தினை வேண்டி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இவ்வருடம் குருமன்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் விசேட ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற இருக்கின்றது.

எனவே குறித்த நிகழ்வில் ஆலய குருமார்கள், பரிபாலன சபையினர், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள், பத்திரிகைத் துறையினர் அனைவரும் உயிரிழந்தவர்களுற்கான விசேட வழிபாடுகளிலும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் கலந்துகொண்டு ஆன்ம ஈடேற்றத்திற்காக வேண்டிக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.

இதேவளை, வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய நிர்வாகம் மற்றும் நகர சபையின் ஏற்பாட்டில் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபியடியில் (இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி) காலை 9 மணிக்கு சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...