Main Menu

ஆப்கானிஸ்தான் படையிடம் சரணடைந்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தான் படையிடம் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் சரணடைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள அசின் நகரில், 18 ஐ.எஸ். தீவிரவாதிகள், 24 பெண்கள் மற்றும் 31 குழந்தைகளுடன் தம்மிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சரணடந்த ஐ.எஸ். தீவிரவாதிகளில் சிலர் தஜிகிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் நடத்தப்பட்ட தீவிரவாத தேடுதல் வேட்டைக்கு பின்னரே தீவிரவாதிகள் சரணடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படையால் சிரியாவில் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மேலும், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும் தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பரவலைத் தடுக்க அந்நாட்டு இராணுவம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

பகிரவும்...