Main Menu

ஆந்திராவில் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை – ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் அரசு வேலை வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்- மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரி ஆன பிறகு இதற்கான திட்டத்தை தயாரித்தார்.

இதன் மூலம் ஒரே நேரத்தில் 4.01 லட்சம் ஆந்திர இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இந்த தகவலை ஆந்திர அரசு தெரிவித்து இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

கிராமங்களில் வாழும் 4 ஆயிரம் பேருக்கு ஒரு கிராம தலைமை செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் 50 வீட்டுக்கு ஒரு தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்த மக்களுக்கு ரே‌ஷன் கார்டு உள்ளிட்ட அரசு நலத்திட்ட தேவைகளை அந்தந்த துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

இது போல் மாநிலம் முழுவதும் கிராமங்களில் அரசு சார்பில் தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10-வது வகுப்பு வரை படித்து தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

நகரங்களில், அமைக்கப்படும் நகர தலைமை செயலகத்தில் பணி புரிய இருக்கும் தன்னார்வ தொண்டர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. கிராம, நகர தன்னார்வ தொண்டர்களை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

இந்த நடவடிக்கை மூலம் கிராமங்களில் 99 ஆயிரத்து 144 பேர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். நகரங்களில் 34 ஆயிரத்து 345 பேருக்கு வேலை கிடைக்கிறது. தற்போது ஆந்திராவில் 13 மாவட்டங்கள் உள்ளன. விரைவில் பாராளுமன்ற தொகுதி அடிப்படையில் 25 மாவட்டங்கள் உருவாக உள்ளன.

தற்போது அரசு அலுவலகங்களில் பணி புரியும் 1 லட்சத்து 33 ஆயிரத்து 494 பேருக்கு பணி நிரந்தரம் அளிக்கப்படுகிறது. இது தவிர தகுதி வாய்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தம் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.

பஞ்சாயத்து அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலம் மக்கள் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் நிரந்தர அரசு பணியாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் வாரம் ஒரு முறை கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கலாம். இதற்கு எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உடனடியாக குறித்து கொடுக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்- மந்திரியை நேரடியாக தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தை நேரில் சென்று கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4.01 லட்சம் இளைஞர்களுக்கு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் பணி வழங்கப்படுகிறது. மக்கள் நலன் பெற நேர்மையான நிர்வாகம் நடைபெற வேண்டும். அதை உறுதி செய்யவும் வாக்குறுதியை நிறைவேற்றவும் எனது தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபடும். இதற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...