Main Menu

அ.தி.மு.க. தலைவர்கள் நாளை அண்ணாமலையை சந்திக்கிறார்கள்

தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று நடந்தது. முதலில் காலை 8.30 மணிமுதல் 10.30 மணிவரை மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார். அப்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கலாம் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர் தனித்து போட்டியிடலாம் என்றனர். அவர்கள் கருத்தை கேட்ட அண்ணாமலை, ‘கூட்டணி தேர்தலில் போட்டியிடுவது, ஆதரிப்பது எதுவாயினும் டெல்லி மேலிடம் தான் அறிவிக்கும். நான் நிர்வாகிகள் கருத்தை மேலிடத்திடம் தெரிவித்து விடுவேன்’ என்றார். இதற்கிடையில் நாளை (21-ந்தேதி) மாலை 3 மணிக்கு அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சென்று அண்ணாமலையை சந்திக்க முடிவு செய்துள்ளனர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கும் படி கேட்டுக்கொள்வார்கள். மாலை 4 மணிக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், அண்ணாமலையை சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார்.

பகிரவும்...