Main Menu

அரியாலை வீட்டுக்குள் 8 இடங்களில் நிலத்தைத் அகழ்ந்து தேடுதல்

அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் 8 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும் அங்கு எவையும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அகழ்வுப் பணிகளைக் கைவிட்ட பொலிஸார் இன்று மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து சென்றனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் இன்று  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட வீட்டின் அறைகளுக்குள் சந்தேககிக்கப்படும் 8 இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அங்கு எவையும் இருக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட பெருமளவு பொலிஸார் இந்த அகழ்வு – தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. எனினும் அந்த முகாம் வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து அகற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீகன், அப்பன் மற்றும் கோபி ஆகிய போராளிகள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர் மூவரும் இந்த வீட்டிலிருந்தே பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வீட்டை வைத்திருந்தனர். தற்போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே அந்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதுதொடர்பில் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இராணுவத்தினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...