Main Menu

அரசு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது – இந்து மாமன்றம்

செம்மலை சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை நடவடிக்கையினை எடுக்காததையிட்டு மிகவும் கவலையடைவதாக வவுனியா இந்துமாமன்றம் தெரிவித்துள்ளது. 

குறித்த விடயம் தொடர்பாக இந்து மாமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்துத் தங்கியிருந்த நிலையில்   புற்றுநோயால் உயிரிழந்த மேதாலங்க தேரரின் உடலை நீதிமன்றின் கட்டளையையும் மீறி இந்து தர்ம நெறிமுறைகளிற்கு அப்பால் முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ததுடன், இனம் தெரியாத காடையர்கள் மூலம் சட்டத்தரணிகளையும், பொதுமக்களையும் தாக்கிய சம்பவத்தினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  

இலங்கையில் சட்டம், நீதி , நெறிமுறைகள் அனைத்தும் சகல இன மக்களிற்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்நிலையில் இந்து மக்களின் பூர்விக வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள  வளாகத்தில் இப்பாதகமான செயல் இடம்பெற்ற நிலையில், அதற்கு காரணமானவர்கள் மீது இலங்கை அரசாங்கம் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்க தவறியதையிட்டு நாம் கவலையடைகின்றோம். 

வன்முறைகளின் மூலம் எதனையும் சாதித்து விடமுடியாது. இச்செயல்கள் அழிவையே தரும். இது எமக்குக் காலம் தந்தபாடம், அன்பே சிவம் அன்பினால் மாத்திரமே எதனையும் சாதிக்கமுடியும். இதையே இந்து , பௌத்த தர்மங்களும் கூறுகின்றன. இந்நிலையில் பௌத்த துறவியான ஞானசார தேரர் தர்மத்திற்கு மாறாக வன்முறையைக் கையிலெடுப்பது எமது நாட்டிற்கு உகந்ததல்ல. 

பலதரப்பட்ட இனவாதங்களைப் பின்பற்றும் நாட்டில் மக்களை பாதிக்கக்கூடிய இப்படியான செயல்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால் இனவாத, மதவாத கருத்துக்கள் மக்கள் மத்தியில் மேலோங்கி நாடு அழிவுப்பாதையை நோக்கியே நகரும். இதனால் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.   

சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தகூடிய  மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரிவரசெய்ய தவறும் பட்டசத்தில் இப்படியான சம்பவங்கள் அதிகரித்து சட்டத்தின் ஆட்சி நிலைகுலைந்து, நீதி நிர்வாகங்கள் அனைத்தும் நெறிமுறையில்லாமல் சீரழிந்து மக்கள் வாழ முடியாத நிலையே ஏற்படும். 

எனவே இச்சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை மேற்கொண்டு குற்றம் இளைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் சார்பாக எதிர்பார்த்து நிற்கின்றோம். என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...