Main Menu

அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை -காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள்

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பக்கோரி இடம்பெறும் போராட்டங்கள் காரணமாக காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நன்மை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சிங்கள மக்களால் சமாளிக்க முடியாதுள்ளது . 69 லட்சம் மக்களால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியையும் அவர்களது குடும்பத்தினரையும் இன்று வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்.

ஆனால் இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட உயிராபத்தை தடுப்பதற்காக அப்போதிருந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக இராஜினாமா செய்திருந்தால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் அவர்கள் இராஜினாமா செய்யவில்லை. அனைவரும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒழித்து வாழ்ந்தார்கள். இதனால் மக்களை அழிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

இதேவேளை அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. ராஜபக்ச அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். சர்வதேச மத்தியஸ்தத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார் .

பகிரவும்...