Main Menu

அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடி அமர்த்தியுள்ளாரா?

பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடியமர்த்தியுள்ளாரா? 

அல்லது அரசியல் பலம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா? போன்ற விடயங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் கங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட  போதே பிரபா கணேசன் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளை வன்னி மாவட்டத்தில் குடியேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த அகதிகளைப் பொறுத்தவரையில் இந்த அகதிகள் பாகிஸ்தான் நாட்டில் பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்திருக்கின்றது. அவர்கள் ஓரினச் சேர்க்கை சம்பந்தமானவர்கள் என்பதையும் நாங்கள் ஊடகங்களுடாகவும் குற்றப்புலனாய்வூடாகவும் அறிந்து கொண்டிருக்கின்றோம். 

ஆகவே இவ்வாறானவர்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்தி இதனூடாக வன்னி மாவட்டத்தில் இன்று அமைதியான சூழலை சீர்குலைக்கப்பார்ப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். யுத்த காலத்தில் வன்னி மாவட்டத்திலிருந்து இந்தியாவிற்குச் சென்ற அகதிகள் இங்கு மீண்டும் வந்திருக்கின்றார்கள். 

அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள்  அல்லது அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் கூட சரியான முறையில் செய்துகொடுக்காத நிலையில் பிறிதொரு நாட்டிலுள்ள அகதிகளை இங்கு கொண்டு வந்து குடியமர்த்த முயற்சிப்பது அல்லது அவர்களைத் தங்க வைக்க முயற்சிப்பது  ஒரு மோசமான விடயமாகவே நான் பார்க்கின்றேன். 

அகதிகளை இங்கு கொண்டு வந்தமை தொடர்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமாரிடம் வினவியபோது அவர் இது பற்றி எனக்குத் தெரியவே இல்லை என்று சொல்லிவிட்டார். மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா  தனிப்பட்ட முறையில் செய்திருக்கின்றாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது. 

அவருடன் இருக்கும் மேலதிக செயலாளருக்கே தெரியவில்லை அவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டது அவர்களை இங்கு கொண்டு வருவதற்கு இவ்வாறான குளறுபடிகள் எந்த அரசியல் ரீதியான அரசியல் வாதி நிர்ப்பந்தத்தைக் கொடுத்தாரோ அல்லது அனுமதியை கொடுத்தாரோ என்பதை எமது மக்களுக்கு தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தப்படவேண்டும். என்று  தெரிவித்துள்ளார்

பகிரவும்...