Main Menu

அமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள் பரப்பப் படுகின்றன: பிரேஸில் ஜனாதிபதி!

உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் இணையம் வழியாகப் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

பிரேசிலின் அமேசான் வளம்மிகுந்த பகுதியாகும். எனவே, இம்மாதிரியான தகவல்கள் பரப்பப்படுகின்றன’ என கூறினார்.

மேலும், அமேசான் காடுகளைப் பாதுகாப்பதற்காக பிரேசில் எடுத்த நடவடிக்கைகளையும் அவர் வெளியிட்டார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேஸிலில் மழைக்காடுகள் அழிவதைத் தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசிலின் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஜெய்ர் போல்ஸனாரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. 40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது.

பகிரவும்...