Main Menu

‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’: ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு சீனா- ஈரான் கடும் கண்டனம்!

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி உலகெங்கிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இனவாதமென்பது ‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’ என சீனா விமர்சித்துள்ளது.

46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான காணொளியொன்றும் வெளியாகி தற்போது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளியில் ‘ஜோர்ஜ் ஃபிலாய்ட்’ என்னால் மூச்சுவிட முடியாது என்று கத்திக் கொண்டிருந்தபோது, 19 வயதான பொலிஸ் அதிகாரியொருவர், ஃபிலாய்டின் கழுத்தில் பல நிமிடங்கள் மண்டியிடுகிறார். முழங்கால்கள் கழுத்தில் இருந்ததால் அசைவில்லாமல் தோன்றுவதை அந்த காணொளி காண்பிக்கின்றது.

இதைத்தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் பொலிஸ் அதிகாரிகள் தண்டிக்கபட வேண்டுமென நியூஸிலாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விடயம் தொடர்பாக சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

பெய்ஜிங்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், ‘அமெரிக்காவில் இனவெறி மற்றும் பொலிஸ் வன்முறை பிரச்சினைகளின் தீவிரத்தை காட்டுகிறது’ என கூறினார்.

இதற்கிடையில் ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி வன்முறையை நிறுத்துமாறு அமெரிக்க அரசாங்கத்தையும் பொலிஸாரையும் வலியுறுத்தியுள்ளார்.

தெஹ்ரானில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘உங்கள் மக்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தி அவர்களை மூச்சுவிட விடுங்கள். அமெரிக்க பொலிஸார் சமீபத்தில் நடத்திய வன்முறையை கண்டு ஈரான் வருத்தப்படுகின்றது. உலகம் உங்களுடன் நிற்கிறது என்றும் அவர் அமெரிக்க மக்களிடம் கூறினார்.

பகிரவும்...