Main Menu

அமெரிக்க அரசியல் கட்சிகளின் 200க்கும் மேற்பட்ட கணினிகளில் ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவல்!

அமெரிக்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கணினி அமைப்புகளில், ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவ முயற்சித்ததாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனநாயகக் கட்சியை ஊடுருவிய அதே அமைப்பே இந்த முயற்சியினை மேற்கொண்டதாக மைக்ரோசாப்ட் குறிப்பிட்டுள்ளது.

இந்த முயற்சிகள் அமெரிக்காவின் அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் தொடர்புடைய குழுக்களை குறிவைப்பதில், பரந்த அதிகரிப்பின் ஒரு பகுதியாகத் தோன்றுகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் துணைத் தலைவரான டாம் பர்ட் கூறுகையில், ‘வேட்பாளர்கள் மற்றும் பிரச்சார ஊழியர்களை மட்டுமல்ல, முக்கிய விடயங்களில் அவர்கள் ஆலோசிக்கும் நபர்களையும் குறிவைக்கின்றனர். இது முந்தைய தாக்குதல் முறைகளுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானது.

ரஷ்ய, சீன மற்றும் ஈரானிய முகவர்களின் பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகள், மைக்ரோசாப்ட் பாதுகாப்பு மென்பொருளால் நிறுத்தப்பட்டன’ என கூறினார்.

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் கடந்த மாதம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவளிப்பதாகவும், சீனர்கள் ஜனநாயகக் கட்சியின் சவாலான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனை விரும்புகிறார்கள் என்றும் கூறியிருந்தமைக்கு மத்தியில் மைக்ரோசாப்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எந்த வெளிநாட்டின் அதிக தலையீடு இருக்கும் என்பதை மைக்ரோசாப்ட் மதிப்பிடவில்லை. ஆனால், சைபர் பாதுகாப்பு நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து என்னவென்றால், ரஷ்ய தலையீடு மிகப்பெரியது என்பதேயாகும்.

இதேவேளை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் எந்தவொரு ஆதாரத்தையும் வழங்காமல், இதை மறுத்துள்ளனர்.

பகிரவும்...