Main Menu

அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் கருப்பின பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரை சேர்ந்த கருப்பின பெண் அட்டட்டியானா ஜெபர்சன் (வயது 28). கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் 8 வயதான உறவுக்கார சிறுமியுடன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தார். அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் ஜேம்ஸ் சுமித் (62) வீட்டில் திருடன் புகுந்து இருப்பதாக நினைத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீஸ்காரர், அட்டட்டியானா ஜெபர்சன் வீட்டுக்குள் நேரடியாக செல்லாமல், வீட்டின் பின்புறமாக சென்று படுக்கையறையின் ஜன்னல் வழியாக ‘‘டார்ச்லைட்’’ அடித்து பார்த்தார்.

அப்போது படுக்கையறைக்குள் ஒரு மேஜையில் துப்பாக்கி இருப்பதை போலீஸ்காரர் கவனித்தார். இதற்கிடையே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து அட்டட்டியானா ஜெபர்சன் படுக்கையறைக்குள் நுழைந்தார். அவரை பார்த்ததும் போலீஸ்காரர் எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன்பிறகுதான் அவர் அந்த வீட்டுக்கு சொந்தக்காரர் என்பது போலீஸ்காரருக்கு தெரியவந்தது. அச்சுறுத்தலை உணர்ந்ததால் அவரை சுட்டதாக போலீஸ்காரர் விளக்கம் அளித்துள்ளார். எனினும் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பி, போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

பகிரவும்...