Main Menu

அமெரிக்காவின் இராணுவ நிலைகள் தாக்கப்படும் – ஈரான் அறிவிப்பு

அமெரிக்காவின் இராணுவ நிலைகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை ஈரான் மேற்கொள்ளும் என அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹொசைன் டெஹ்கான் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கிய தளபதியை கொலை செய்தமைக்கான பதிலடி நிச்சயம் இராணுவ ரீதியிலானதாக காணப்படும் எனவும் இந்தத் தாக்குதல் இராணுவ இலக்குகள் மீது மேற்கொள்ளப்படும் என்றும் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரு போதும் யுத்தத்தை விரும்பவில்லை என எங்கள் தலைமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவே யுத்தத்தை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கான பொருத்தமான எதிர் விளைவினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்கர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்பிற்கு ஏற்ற பாதிப்பை அவர்கள் அனுபவிப்பதன் மூலம் மாத்திரமே இந்த யுத்த காலத்தை முடிவிற்குக் கொண்டுவர முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் குருதுஸ் பிரிவுத் தளபதி காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் பதில் தாக்குதல் நடத்துவதற்கு முனையுமாக இருந்தால் அந்நாட்டின் 52 நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும், அவ்வாறான தாக்குதல்கள் அதிநீவன ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவித்தார்.

எனினும் இவ்வாறு நாட்டின் கலாசாரத் தளங்களைக் குறிவைக்கும் எந்தவொரு முடிவும் போர்க்குற்றமே  என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஜரிஃப் ட்ரம்ப்பின் கருத்துக்கு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...