Main Menu

அபுதாபி அருங் காட்சியகத்தில் உலகப் பிரசித்தி பெற்ற சிந்தனையாளர் சிலை

உலகின் மிகவும் பிரபலமான சிலைகளில் ஒன்று, ஐக்கிய அரபு ராச்சியத்தின் அபுதாபி – லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ஆகுஸ்ட் ரொடானின் மிக முக்கியமான படைப்பான குறித்த சிலை அங்கு ஓராண்டுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தைக் கைகளில் தாங்கி அமர்ந்திருக்கும் மனிதனின் தோற்றத்தை சித்திரிக்கும் குறித்த சிலை, உலகில் மிக அதிகமாக நகலெடுக்கப்பட்ட சிலைகளில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. ‘The Thinker’ அதாவது சிந்தனையாளர் என்பது இந்த சிலையின் பிரபலமான பெயராகும்.

வெண்கலம், பளிங்கு எனப் பலதரப்பட்ட பொருள்களால் உலகெங்கும் நகலெடுக்கப்பட்ட இந்தச் சிலை வடிவத்தைப் பலரும் பார்த்திருக்கலாம்.

பரிஸ் நகரில் உள்ள ரொடான் கலைக்கூடத்தைச் சேர்ந்த இந்தச் சிலை தற்போது அபுதாபியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சிலையை ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நேரில் காண இது ஒரு வாய்ப்பாகும். சிலையில் சித்திரிக்கப்பட்ட மனிதர் எதைப் பற்றிச் சிந்தனை செய்கிறார் என்பதில் பல முரண்பாடுகள் உள்ளன.

1881 ஆம் ஆண்டில் சிந்தனையாளர் சிலை முதன்முதலாக வார்க்கப்பட்டபோது, அந்தச் சிலைக்கு முதலில் கொடுக்கப்பட்ட பெயர் கவிஞன் என்பதாகும்.

நரக வாயில்கள் என்னும் சிற்பத் தொகுப்பில் நடுநாயகமாகச் சிறிய அளவில் சிந்தனையாளரை முதலில் வடித்தார் சிற்பக் கலைஞர் ரொடான்.

பின்னர் அந்தச் சிலை மட்டும் 1888 ஆம் ஆண்டு முதல், தனியே காட்சிக்கு வைக்கப்பட்டுப் புகழடைந்தது.

பகிரவும்...