தேவாலயத்தில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பாதிரியார் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில், தேவாலயத்தில் வழிபாட்டு நிகழ்வை நடத்திக்கொண்டிருந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் சிலுவை திடீரென கழன்று விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பட்ரிசியோ சான்செஸ் என்ற பாதிரியார், குவாயாகில் நகரிலுள்ள ‘பெர்பெடுவோ சொகோரோ’ தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பலிபீடத்துக்குப் பின்புறமாக சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மரத்தினாலான சிலுவை திடீரென கழன்று, பாதிரியாரின் தலையில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வழிபாட்டு நிகழ்வு சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்ததால், இந்த விபத்தும் காணொளியில் பதிவாகியுள்ளது.
பாதிரியாரின் உயிரிழப்பை குவாயாகில் மறைமாவட்டம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவரது குடும்பத்தினருக்கும் அப்பகுதி கத்தோலிக்க சமூகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
