Main Menu

அட்லாண்டிக் பெருங்கடலைப் படகில் கடக்கத் தயாராகும் சிறுமி!

புவி வெப்பமடைதல் பற்றி சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 16 வயதான சுவீடன் நாட்டு மாணவி ஒருவர் பந்தய படகின் உதவியுடன் அட்லாண்டிக் பெருங்கடலை கடக்க தயாராகி வருகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் புவி வெப்பமயமாதல் தொடர்பான மாநாடு ஒன்று இந்த மாதம் நியூயோக் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் உலகெங்கிலுமிருந்தும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேடா தன்பெர்க் (Greta Thunberg) என்ற 16 வயது மாணவியும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

தான் கல்வி கற்கும் பாடசாலையில் ஓர் ஆண்டு விடுப்பு பெற்றுக்கொண்டு புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் கிரேடா, `மலிசியா 2′ என்ற ‘ரேஸிங் யாட்’ வகைப் பந்தய படகில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கவுள்ளார்.

இந்த சாதனைப் பயணத்திற்கு இரண்டு வார காலம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் புவி வெப்பமயமாதல் மாநாட்டிலும் கிரேடா பங்கெடுக்கவுள்ளார்.

இந்த இரு மாநாடுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கிரேடா, “நம் கையில் காலம் மிகக்குறைவாகவே இருக்கின்றது. போதுமான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

எனவேதான் இந்தப் பயணங்களை மேற்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். குறித்த 60 அடி படகில் சமையலறை, குளிர்சாதன பெட்டி, குளிரூட்டி, குளியல் அறை என எந்த நவீன வசதியும் இல்லை என்று ‘ரேஸிங் யாட்’ படகை மாணவிக்கு அளித்த அதன் உரிமையாளர் பொரிஸ் ஹெர்மன் தெரிவித்துள்ளார்.

பொரிஸ் மேலும் கூறுகையில் “பாதுகாப்புக்குரிய எல்லா அம்சங்களும் இருந்த போதும், படகில் ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறினேன், கிரேடா அதைப் பொருட்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டார்.

இந்தநிலையில், விமானங்கள் வெளியிடும் `பைங்குடில் வாயு’வை (Greenhouse Gas) கருத்தில் கொண்டு தீவிர சூழல் ஆர்வலரான கிரேடா விமானங்களில் பயணிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...