Main Menu

ஃபைஸர்- மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும்!

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாக ஐரோப்பிய மருத்துவ முகமை கூறியுள்ளது.

இதயத்தில் வலி ஏற்படுவது, அவ்வப்போது சுவாசம் இல்லாத தன்மையை உணர்வது, திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது இதயத் துடிப்பு சீரற்று இருப்பது போன்றவை இதய அழற்சிக்கான அறிகுறிகள். யாருக்காவது இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து தங்களுக்கு இதய அழற்சி இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

இதய அழற்சி தொடர்புடைய மையோகார்டிட்டிஸ் மற்றும் பெரிகார்டிட்டிஸ் என்ற இரண்டு அறிகுறிகள் ஃபைஸர் மற்றும் மொடர்னா கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதால் ஏற்படுகின்றன.

இதய தசைகளில் அழற்சி ஏற்படுவதுதான் மையோகார்டிட்டிஸ். இதயத்தில் இருக்கும் பெரிகார்டியம் பகுதிகளில் ஏற்படும் அழற்சிதான் பெரிகார்டிட்டிஸ்.

ஃபைஸர் – பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 145 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 138 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது.

மொடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 19 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 19 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது என்று ஐரோப்பிய மருத்துவ முகமையின் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அந்த ஐவரும் வயதானவர்கள், தவிர அவர்களுக்கு மற்ற பல உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகவும் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்காற்று முகமை விசாரித்து வருகிறது.

பெரும்பாலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு 14 நாட்களுக்குள் இப்படிப்பட்ட இதயக் கோளாறுகள், மிக அரிதாகவே ஏற்படுகின்றன.

பிரித்தானியாவிலும், ஐரோப்பாவிலும் கொரோனாவால் ஏற்படும் பக்க விளைவுகள் பட்டியலில் மையோகார்டிட்டிஸ், பெரிகார்டிட்டிஸ் ஆகியவை அதிகாரபூர்வமாக சேர்க்கப்படவுள்ளன.

பகிரவும்...