வோல்டா ஏ கத்தலுன்யா பந்தயத் தொடர்: மிகுவல் ஆங்கல் லோபஸ் சம்பியன்
அனைத்து அங்கங்களையும் பயிற்சிக்கு உட்படுத்தும், சைக்கிளோட்டப் போட்டிகளுக்கு இவ் உலகில் இரசிகர்கள் பல கோடி..
அதிலும் ஸ்பெயினில் நடைபெறும் வோல்டா ஏ கத்தலுன்யா சைக்கிளோட்ட பந்தயத் தொடருக்கு தனிச் சிறப்பு உண்டு.
இவ்வாறு கடந்த ஒரு வாரகாலமாக சைக்கிளோட்ட பந்தய இரசிகர்களை மகிழ்வித்து வந்த வோல்டா ஏ கத்தலுன்யா சைக்கிளோட்ட பந்தயம் நிறைவடைந்துள்ளது.
இதில் 1,178.4 கிலோ மீற்றர் தூரத்தை 7 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொறு கட்டமாக போட்டிகள் நடைபெற்றன. இதில் அதிக சுற்றுகளில் வெற்றிபெற்று அதிக புள்ளிகள் பெற்ற வீரர் இறுதியாக சம்பியனாக தெரிவுசெய்யப்படுவார்.
அவ்வாறு அதிக பந்தயங்களில் வெற்றிபெற்ற கொலம்பியாவின் மிகுவல் ஆங்கல் லோபஸ் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஏற்றம், இறக்கம் நிறைந்த பதைகளில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மற்றும் பிரபல அணிகளை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றனர்.
சரி தற்போது இத்தொடரின் இறுதி சுற்றான 7ஆவது சுற்றின் முடிவினை பார்க்கலாம்,
இப்பந்தயத் தொடரின் 7ஆவது சுற்று நேற்று நடைபெற்றது. பார்சிலோனாவில் நடைபெற்ற இப்பந்தயத்தில், சுமார் 141.1 கிலோ மீற்றர் தூரத்தை பந்தய வீரர்கள் போட்டியிட்டனர்.
போட்டியாளர்களுக்கான பாதை, கடினமான மலை பிரதேசத்தை சுற்றியதாக அமைந்திருந்தது.
இப்பந்தயத்தில் இத்தாலியின் டேவிட் ஃபார்முலோ 3 மணித்தியாலங்கள் 19 நிமிடங்கள் 41 செக்கன்களில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்கான 50 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இவரை தொடர்ந்து, ஸ்பெயினின் என்ரிக் மாஸ், 51 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, 30 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.
ஜேர்மனியின் மாக்சிமிலன் ஸ்கச்மான் 53 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்ததோடு, 18 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.
………..
ஒட்டு மொத்த பந்தயங்களின் அடிப்படையில், 250 புள்ளிகளை பெற்று, கொலம்பியாவின் மிகுவல் ஆங்கல் லோபஸ் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
பிரித்தானியாவின் ஆடம் யேட்ஸ், 190 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
கொலம்பியாவின் எகான் பெர்னல், 160 புள்ளிகளை பெற்று, மூன்றாவது இடத்தை பிடித்தார்.