வர்த்தகப்போரை விரும்பவில்லை- சீனா
தாங்கள் வர்த்தகப்போரை விரும்பவில்லை என சீனா தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார்.
அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டது. இரு நாடுகளும் போட்டிபோட்டு இறக்குமதி வரியை உயர்த்தின. இதற்கு தீர்வுகாணும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி-20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகப்போரை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைத்து, பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் இன்றி முடிவுக்கு வந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான, இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
இந்த நிலையில் வர்த்தகப்போர் தொடர்பாக சீன அரசு நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில், வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு அமெரிக்கா தான் காரணம் என தெரிவித்துள்ளது. வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சீனா வர்த்தகப்போரில் ஈடுபடவிரும்பவில்லை. அதே சமயம் வர்த்தகப்போருக்கு சீனா பயப்படாது. வர்த்தகப்போர் நிச்சயமாக தேவைப்படும் பட்சத்தில் சீனா தனது அணுகுமுறையை மாற்றி கொள்ளாது. எந்த பிரச்சினை வந்தாலும் சீனா ஒருபோதும் தனது முக்கிய கொள்கைகளை விட்டுக்கொடுக்காது.
அமெரிக்காவின் உயர்மட்ட கோரிக்கைகள் சீனாவின் இறையாண்மையில் தலையீடுவதாக உள்ளது. ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம், சீனா மீது அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம், வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கும், இருநாட்டின் தற்போதைய உறவு நிலைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தீவிர அழுத்தத்தை கொடுப்பதன் மூலமும் அனைத்து வழிகளில் வர்த்தக பிரச்சினையை ஏற்படுத்துவதன் மூலமும் சீனாவை சரணடைய வைத்து விடலாம் என அமெரிக்கா கருதினால், அது கனவிலும் சாத்தியமற்றதாகும்.
இவ்வாறு வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.