Main Menu

சிரியா சந்தைப் பகுதியில் கார் குண்டு தாக்குதல் – 17 பேர் பலி

சிரியாவின் பரபரப்பான சந்தை மற்றும் மசூதி அருகில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

சிரியாவில் ரம்ஜான் பண்டிகைக்கான ஆயத்த ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபாடு காட்டிவரும் நிலையில் பிரபல வணிக வளாகங்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் களைக்கட்ட தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அலெப்போ மாகாணத்தில் உள்ள அஜாஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று மாலை நோன்பு திறந்துவிட்டு, தொழுகைக்கு பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அருகாமையில் உள்ள சந்தைப் பகுதியில் ஏராளமானவர்கள் புது ஆடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்தனர்.

அப்போது அங்கு பயங்கர சப்தத்துடன் ஒரு கார் வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 குழந்தைகள் உள்பட 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த பல கடைகள் தீக்கிரையானதால் சந்தைப் பகுதி தற்போது மயானம்போல் வெறிச்சோடி காணப்படுகிறது.

பகிரவும்...