ரோகித் சர்மா சதம் – முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி
ரோகித் சர்மாவின் சிறப்பான சதத்தால் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மோரிஸ் 42, டு பிளிசிஸ் 38, பெலுக்வயோ 34, ரபாடா 31, மில்லர் 31 ரன்கள் எடுத்தனர். ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்திய அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, புவனேஸ்வர் குமார் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.
இதனையடுத்து, 228 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 54 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது.
பின்னர், விக்கெட் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா நிதானமாக நின்று விளையாடினார். அவருக்கு கே.எல்.ராகுல் ஒத்துழைப்பு அளித்தார். தொடக்கத்தில் மிகவும் பொறுமையாக ரோகித் விளையாடினாலும், பின்னர் அடித்து விளையாட ஆரம்பித்தார். 70 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். நிதானமாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 26 (42) ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 128 பந்துகளில் சதம் அடித்தார். ரோகித், தோனி ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. தோனி 34(46) ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 122(144) ரன்களுடனும், ஹர்திக் பாண்டா 7 பந்துகளில் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென்னாப்ரிக்கா அணி சார்பில் மோரிஸ், ரபாடா, பெலுக்வாயோ சிறப்பாக பந்துவீசினர். ரபாடா இரண்டு விக்கெட்களை சாய்த்தார். தென்னாப்ரிக்கா வீரர்கள் நிறைய கேட்ச்களை கோட்டை விட்டனர்.
இதன் மூலம் இந்திய அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தென்னாப்ரிக்க அணி தொடர்ந்து மூன்றாவது தோல்வியை பெற்றுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.