யுத்தமொன்றின் போது நிறுத்தப்படாத அபிவிருத்தி கொவிட் தொற்று பரவலால் நிறுத்தப்படாது – பிரதமர்
யுத்தத்தின்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்ததைப் போலவே கொவிட் தொற்று நோயையும் எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.
வடமேல் மாகாண கால்வாய் (‘மஹ எல’) திட்டத்தின், மஹகித்துலா மற்றும் மஹகிருல நீர்த்தேக்கங்களின் கட்டுமானப் பணிகளை யாபஹுவ இருதெனியாய, கொன்கஹ சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “உலகின் மிக மோசமான பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடிய போதிலும், நாட்டின் அபிவிருத்தியை ஒரு கணம் கூட நாங்கள் கைவிடவில்லை.
யுத்தத்தின் போது கூட நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்தோம், கிழக்கை காப்பாற்றி இராணுவத்தை வடக்கே வழிநடத்தும் போது கிழக்கு மாகாணம் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டது. வடக்கில் யுத்தத்தை நிறைவுசெய்த அந்த போர்வீரர்கள், அபிவிருத்தி செய்யப்பட்ட மாகாணங்கள் வழியாக தெற்கிற்கு வந்தனர்.
யுத்தத்தின் போதுதான் கொழும்பு – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். யுத்தத்தின் போதுதான் நாங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.
நாங்கள் யுத்தத்தை வெற்றி கொண்டதன் பின்னர், இந்த பணிகளை செய்ய விரும்பியிருந்தால் நாங்கள் எதையும் செய்ய முடியாது. எனவே கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியிலும் அபிவிருத்திகளை நிறுத்த மாட்டோம் என்று கூற வேண்டும்.
நோய்வாய்ப்பட்ட உலகத்தின் மத்தியில் ஆரோக்கியமான அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே எங்கள் நம்பிக்கை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.