Main Menu

ஸ்டீபன் ரப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்

யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனரென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார் என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளதை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.

நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடலொன்று நடைபெற இருக்கின்றமை தொடர்பாக ஸ்டீபன் ரப் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜனாதிபதி அலுவலகம், ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளதாக ஐலண்ட் செய்தி சேவை கூறியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “யுத்த குற்ற விவகாரங்களிற்கான அலுவலகத்திலிருந்து ஓய்வுபெற்று ஏழு வருடங்களின் பின்னர் ஸ்டீபன் ரப் அவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான நோக்கம் என்ன?

கடந்த 2012- 2015 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்டீபன் ரப்,  தற்போது ஜெனீவா அமர்வினை அடிப்படையாக வைத்து இந்த அதிர்ச்சிதரும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இது பார்க்க தோன்றுகின்றது.

இதேவேளை மோதல் களங்களில் கொலைகள் இடம்பெறவில்லை என அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக விளங்கிய லோரன்ஸ் ஸ்மித் என்பவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரப் தனது பதவிக்காலத்தில் இலங்கை ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார் என குறிப்பிட்டாரா? 2015 ஜெனீவா அமர்விற்கு முன்னதாக ரப் இந்த விடயத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் பகிர்ந்துகொண்டாரா? என்பது குறித்து யுத்த குற்றங்களிற்கான மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகம் தெளிவுபடுத்தவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...