மோடி பதவியேற்றதை தொலைக்காட்சியில் கண்டுகளித்த தாயார் ஹீராபென்
நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றதை, அவரது தாயார் தன் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான பதவியேற்பு விழாவில், புதிய அரசு பொறுப்பேற்றது. நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் மோடியின் தாயார் ஹீராபென், குஜராத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பதவியேற்பு விழாவை கண்டுகளித்தார். தன் மகன் மீண்டும் பிரதமராக பதவியேற்றதை பார்த்து, உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.