Main Menu

பாரதத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மோடி

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8000 பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன், பாரதத்தின் 17ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார்.

இன்று மாலை 7 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமாகிய ராஷ்ட்ரபதி பவனில் பதவியேற்பு விழா இடம்பெற்றது.

இந்தப் பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீட் ஆகியோரும் கிர்கிஸ்தான், மியன்மார், மொரீஷியஸ், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களும், தாய்லாந்தின் சிறப்புத்தூதுவரும் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அவரது தாயார் சோனியா காந்தியுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இதனைத்தவிர ஆளுநர்கள், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிபுரியும் மாநிலங்களின் முதல்வர்கள், பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மக்களவைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் இந்தப் பதவியேற்பு வைபவத்தில் இணைந்துகொண்டனர்.

கட்சிப்பணிகளின் போது, ஏற்பட்ட மோதல்களால் மேற்கு வங்கத்தில் உயிரிழந்த 50 பா.ஜ.க தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, தமது இரண்டாவது தவணையின் முதலாவது வௌிநாட்டு விஜயத்தை பாரதப் பிரதமர் மோடி மாலைத்தீவுகளுக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, மாலைத்தீவு பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றினை பாரதப் பிரதமர் மோடி நிகழ்த்தவுள்ளார்.

மாலைத்தீவுகளுக்கு செல்லும் வழியில் அல்லது மாலைத்தீவுகளிலிருந்து திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இது பிரதமர் மோடியின் இரண்டாவது தவணையின் இரண்டாவது வௌிநாட்டு விஜயமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...