மோடியை தோற்கடிக்க எதுவும் செய்ய தயார்: கெஜ்ரிவால்
பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
முதல்கட்ட தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடு தற்போது ஆபத்தில் உள்ளது. பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. டெல்லியில் மட்டும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால், ஆம் ஆத்மியோ அரியானா மாநிலத்திலும் கூட்டணி அமைக்க விரும்புகிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக, டெல்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.
நேற்றைய கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கலந்துகொண்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “காங்கிரசின் நிலைப்பாடு உங்களுக்கு தெரியும். டெல்லியில் ஏறக்குறைய முடிவு செய்துவிட்டோம். ஆனால், கூட்டணியை பிற மாநிலங்களுடன் இணைப்பது சரியல்ல” என்று கூறினார்.