மெக்சிகோவில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் பலி
மெக்சிகோவின் கல்ப் கடற்கரையை அண்டிய வெரகுரூஸ் பிரதேசத்தில் உணவகமொன்றில் திடீரென நுழைந்த துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நபரொருவரை தேடி உணவகத்தில் நுழைந்த சந்தேகநபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் , 7 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் குறித்த நகரில் மதுபான சாலையொன்றின் உரிமையாளர் என தெரியவந்துள்ளது.
மெக்சிகோவில் காவற்துறையினருக்கும் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் இடையில் இதுபோன்ற மோதல்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் மெக்சிகோவில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் வன்முறை சம்பவங்களால் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.