முஸ்லிம் எம்.பி.க்களின் இராஜினாமா கடிதம் தொடர்பில் சபையில் சர்ச்சை
முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சியினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நிகழ்வுகள்
நிறைவடைந்த பின்னர். முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் குறித்து ஊடகங்களில் வெளிப்பட்டிருக்கும் செய்திதொடர்பிலும் மகாசங்கத்தினர் விடுத்திருக்கும் கோரிக்கை தொடர்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சியினருக்குமிடையே வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.
இதன்போது ஆரம்பமாக இராஜிநாமா கடிதம்தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்துகையில் அமைச்சுப்பதவிகள் மற்றும் இராஜாங்க பிரதி அமைச்சுப்பதவிகளை வகித்துவந்த முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் என்னை சந்தித்து அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு அவர்களது இராஜினாமா கடிதத்தை என்னிடம் கையளித்திருந்தனர். மறுநாள் அமைச்சரவை கூட்டத்தின்போது இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு நாங்கள் தெரிவித்தோம். அத்துடன் அன்றைய தினம் பிற்பகல் வேளையில் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் தொடர்பாக எனது அலுவலக சட்ட ஆலோசகர்களுக்கு அறிவித்தேன்.
இதன்போது இராஜினாமா கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்ப தனித்தனியாக வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.மறுநாள் நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்துக்காக அதிகமான உறுப்பினர்கள் வெளிப்பிரதேசங்களுக்கு சென்றிருந்ததால் இராஜினாமா கடிதங்களை இன்றைய தினம் (நேற்று) கையளிக்குமாறு கோரியிருந்தோம். அந்தவகையில் அதிகமான கடிதங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இன்னும் சில கடிதங்கள் கிடைக்க இருக்கின்றன. அவை கிடைத்ததும் அந்த வேலைத்திட்டம் முடிவடையும் என்றார்.
இதன்போது எழுந்த தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில் அடிப்படைவாதத்தை இல்லாமலாக்குமாறும் முஸ்லிம் மக்கள் அனைவரும் அடிப்படைவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் அல்ல என்றும் எதிர்க்கட்சி தலைவர் உட்பட நாங்கள் அனைவரும் தெரிவித்து வந்தோம். அத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ததாக அறிவித்திருந்தார்கள். ஆனால் அவர்களின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அதனால் அவர்கள் தொடர்ந்தும் அமைச்சுப்பதவிகளில் இருப்பதாகவும் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதபோன்று முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்ந்தும் அமைச்சுப்பதவிகளில் இருப்பார்கள் என்று சபைமுதல்வரும் தெரிவித்திருந்தார்.
ஆனால் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் 18ஆம் திகதி இடம்பெறும் என்று இருக்கின்றது. அதனால் குறித்த தினத்தில் அதுதொடர்பான விவாதம் இடம்பெறுமா இல்லையா? இதுதொடர்பில் சபைக்கு தெரிவிக்கவேண்டும். உறுப்பினர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் பதவி விலகவில்லை என்று பிரதமரும் தெரிவித்தார்.அதனால் இதுதொடர்பில் தெளிவான தீர்ப்பொன்றை தெரிவிக்கவேண்டும் என்றார்.
இதன்போது ரவூப் ஹக்கீம் எழுந்துஇ எங்கள் நிலைமைய சந்தர்ப்பமாக கொண்டு தினேஷ் குணவர்த்தன அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றார் என்பது எமக்கு தெளிவாகின்றது. என்றாலும் நாங்கள் பொதுவாக எமது இராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு கையளித்திருந்தோம்.
என்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் தனித்தனியாகவே உறுப்பினர்கள் ராஜினாமா கடிதங்களை கையளிக்கவேண்டும் என்ற தகவல் பிரதமருக்கு கிடைத்தபோது எமது நோன்புப்பெருநாள் கொண்டாட்டம் வந்ததால் அதனை உடனடியாக எமக்கு மேற்கொள்ள முடியாமல் போனது. தற்போது எமது இராஜினாமா கடிதங்கள் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமை நாங்கள் தெரிவித்ததுபோன்று அன்றைய தினத்துக்கு பின்னர் நாங்கள் எவரும் அமைச்சர்களாக செயற்படவும் இல்லை. அமைச்சுக்களுக்கு செல்லவும் இல்லை. அமைச்சர் என்றவகையில் உத்தியோகபூர்வமான நிகழ்வுக்களுக்கு செல்லவும் இல்லை. எனவே கடந்த திங்கட்கிழமை முதல் நாங்கள் பதவிகளில் இருந்து விலகினோம் என்பதே உண்மையான நிலைமை என்றார்.
இதன்போது சபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்போது இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தி எனக்கு காலையிலே கிடைத்தது. எப்படி இருந்தபோதும் அவர்கள் முறையாக கடிதத்தை கைகளிக்கும்வரை நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் ஒழுங்கு பத்திரத்தில் தொடர்ந்து இருக்கும். அதன் பின்னர் மாற்றிக்கொள்ளலாம் என்றார்.
இதன்போது எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா மஹிந்த அமரவீர தெரிவிக்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப்பொறுப்புக்களை வகிக்கவேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருப்பதை வரவேற்கின்றேன். இந்த பிரச்சினை நீடிக்காமல் சமாதானமாக முடித்துக்கொள்ளவே மகாசங்க தலைவர்கள் இந்த கோரிக்கையை விட்டிருக்கின்றனர்.
அதனால் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் கலந்துரையாடி மகாசங்க தலைவர்களுடன் பேசி தீர்மானிக்கவேண்டும். மீண்டும் அடிப்படைவாத தாக்குதல் ஒன்று இடம்பெறக்கூடாது. அத்துடன் இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதமோ சிங்கள அடிப்படைவாதமோ வேறு எந்த அடிப்படைவாதத்துக்கும் அடமளிக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அதனால் இடம்பெற்ற நிகழ்வுகளை பாடமாக எடுத்துக்கொண்டு நாட்டில் சிங்கள முஸ்லிம் தமிழ் மக்கள் இணைந்து நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ள தேவையான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும். அதற்காக முஸ்லிம் தலைவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு கலந்துரையாடலொன்றுக்கு செல்லவேண்டும் என்றார்.