முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்- இளைஞன் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்!
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பபையடுத்து, 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, வெடிப்பு இடம்பெற்ற பகுதி அண்மையில் சுத்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் தொடர் மழையையடுத்து மண்ணுக்குள் புதைந்திருந்த பொருட்கள் சில வெளியில் தென்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த யுத்த காலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஏதாவது பொருள் இவ்வாறு வெடித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்த விசாரணைக்காக விசேட நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதுடன் இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.