Main Menu

தமிழர்களுக்கு பெரும்பான்மை சமூகம் செய்த அநீதியே நாடு துண்டாடப்படக் காரணம்- இராதாகிருஸ்ணன்

மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுவொரு துரதிஷ்டமான நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதுளை ரிவ் சைட் விருந்தகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இராதாகிருஸ்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “தற்போது இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் அன்று பெரும்பான்மை சமூகம் மலையக மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இதேவேளை, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்திசெய்யும் செயற்றிட்டங்களை துரிதப்படுத்த வேண்டும்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களையும் மலையகத்தின் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

அத்தோடு, மலையகத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல வருடங்களாக விடுக்கப்பட்டு வரும்நிலையில் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கு மாணவர்களை உருவாக்கும் பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு அரசியல் பேதமின்றி சகல பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...