Main Menu

மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!

தென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் (Park Won-soon) மாயமான நிலையில், அவர் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழு மணி நேர தேடுதலுக்கு பின்னர் மேயர் பார்க் ஒன் சூன் உடல், சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்த 64 வயதான மேயர் பார்க் ஒன் சூன், கடந்த 2014ஆம் ஆண்டு மேயராக தேர்வானார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று மேயரானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சியோல் மேயர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மேயர் பார்க் மீது ‘மி டூ’ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் மேயர் பார்க் ஒன் சூன் திடீரென மாயமானார். அவர் மாயமான தகவலை அவரது மகள் தான் முதல்முதலாக பொலிசுக்கு அறிவித்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய பொலிஸார், அவரது கைத்தொலைபேசி இறுதியாக சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் செயற்பாட்டில் இருந்ததை கண்டறிந்து, மலைப்பகுதிக்கு விரைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 7 மணி தேடுதலுக்கு பின்னர் அவரை சடலமாக கண்டெடுத்தனர். இந்தநிலையில் இவரது மரணம் தொடர்பாக சந்தேகம் கொண்டுள்ள பொலிஸார், இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...