பிரித்தானியா, ஜேர்மனி இடையிலான உறவுகள் தொடரவேண்டும் – இளவரசர் சார்லஸ்
பிரெக்சிட்டின் விளைவுகள் என்னவாக இருந்தாலும் பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகள் தொடரவேண்டும், தொடரும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய இளவரசர் சார்லஸ்.
பெர்லினில் பிரித்தானிய தூதுவரின் வீட்டில் உரையாற்றிய இளவரசர் சார்லஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் ஜேர்மனி பிரித்தானியாவின் இயற்கைக் கூட்டாளி என்றார் அவர். இளவரசர் சார்லசும் அவரது மனைவி கமீலாவும் நான்கு நாள் பயணமாக ஜேர்மனி வந்துள்ளனர்.
நேற்று ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்த இளவரசர் தம்பதி, பின்னர் Leipzig மற்றும் Munich செல்ல இருக்கின்றனர்.
மகாராணியாரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பேசிய இளவரசர் சார்லஸ், பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவின் வலிமையை புகழ்ந்தார்.
அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான பேச்சு வார்த்தைகள் எப்படி இருந்தாலும், ஒப்பந்தங்கள் எப்படி இருந்தாலும், நமக்கிடையிலான உறவு எப்போதும் தொடரும், தொடரவேண்டும் என்றார் அவர்.
எதிர்காலத்தில் நமக்கிடையிலான உறவுகள் இன்னும் உறுதிப்பட வேண்டும் என்றார் அவர்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் மாதம் 29ஆம் திகதி வெளியேறியிருக்க வேண்டும்.
ஆனால் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒப்பந்தங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாததால், ஐரோப்பிய ஒன்றியம் பிரெக்சிட் திகதியை அக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை நீட்டித்திருக்கிறது.