பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்
டென்னிஸ் உலகில் உயரிய தொடராக கருதப்படும் கிராண்டஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரில், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரும் ஒன்று.
ஆண்டில் மொத்தமாக நான்கு கிராண்டஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெறும். இதில் களிமண் தரையில் நடைபெறும் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆண்டின் இரண்டாவது கிராண்டஸ்லாம் தொடராக நடைபெறும் இத்தொடரின், 128ஆவது அத்தியாயம் கடந்த 26ஆம் திகதி, ஆரம்பமாகி எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நுற்றாண்டுகள் பழமையான இந்த தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகள், மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகின்றது. ஆனால் ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.
சரி வாருங்கள்! ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்…
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், ஜேர்மனியின் ஒஸ்கார் ஓட்டே ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை சற்று போராடி கைப்பற்றிய ரோஜர் பெடரர், அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், ரோஜர் பெடரருக்கு ஒஸ்கார் ஓட்டே சற்று நெருக்கடி கொடுத்தார்.
எனினும், அந்த நெருக்கடிகளை திறம்பட சமாளித்த பெடரர், மூன்றாவது செட்டையும் 6-4 என கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
………………
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இன்னொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில், சுவிஸ்லாந்தின் ஸ்டென் வாவ்ரிங்கா, சிலியின் கிறிஸ்டியன் காரின் ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், எவ்வித சவாலும் இன்றி முதல் செட்டை 6-1 என ஸ்டென் வாவ்ரிங்கா, கைப்பற்றினார்.
இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், கிறிஸ்டியன் காரின், ஸ்டென் வாவ்ரிங்கா, சற்று நெருக்கடி கொடுத்தார். இந்த செட்டில் கடுமையாக போராடி ஸ்டென் வாவ்ரிங்கா, 6-4 என செட்டைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், எவ்வித அழுத்தங்களையும் எதிர்கொள்ளாத ஸ்டென் வாவ்ரிங்கா, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் முன்னேறியுள்ளார்.
…………….
ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும், குரேஷியாவின் மரின் சிலிச்சும் பலப்பரீட்சை நடத்தினர்.
இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுத்த இப்போட்டியின் முதல் செட்டே டை பிரேக் வரை நகர்ந்தது. இதில், கடுமையாக போராடி முதல் செட்டை 7-6 என மரின் சிலிச் கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய கிரிகோர் டிமிட்ரோவ், 6-4 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இதனைதொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டை, 6-4 என மரின் சிலிச் மீண்டும் கைப்பற்ற, நான்காவது செட்டை டை பிரேக் வரை நகர்த்தி 7-6 என கிரிகோர் டிமிட்ரோவ், கைப்பற்றினார்.
இருவரும் தலா இரண்டு செட்டுகளை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் எதிர்பார்ப்பை எகிறவைத்தது.
இதில் சிறப்பாக விளையாடிய கிரிகோர் டிமிட்ரோவ், 6-3 என செட்டைக் கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
……………….
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ஜப்பானின் கெய் நிஷிகோரி, பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், முதல் செட்டை 4-6 என இழந்த கெய் நிஷிகோரி, அதன் பிறகு ஆக்ரோஷமாக மீண்டெழுந்தார்.
அடுத்து 6-4, 6-4, 6-4 என மூன்று செட்டுகளை தொடர்ச்சியாக கைப்பற்றிய கெய் நிஷிகோரி, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
……………
இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், ஜேர்மனியின் யானிக் மடென்னை எதிர்த்து விளையாடினார்.
பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், பெரிதும் சவாலை எதிர்கொள்ளாத நடால், 6-1, 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
……………..
அடுத்ததாக பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் ஜோஹானா கொன்டா , அமெரிக்காவின் லாரன் டேவிஸ்சை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், முதல் செட்டை ஜோஹானா கொன்டா 6-3 என கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-1 கைப்பற்றி லாரன் டேவிஸ் பதிலடி கொடுத்தார்.
இதன்பிறகு வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், இருவரும் சிறப்பாக விளையாடினார்.
ஆனால் இறுதி தருணத்தில் ஆக்ரோஷமாக விளையாடிய ஜோஹானா கொன்டா, 6-3 என செட்டைக் கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
……………..
பெண்கள் ஒற்றையர் பிரிவு இன்னொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, கிறிஸ்டினா கூகோவாவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நகர்ந்த இப்போட்டியில், எவ்வித சவாலையும் எதிர்கொள்ளாத கரோலினா பிளிஸ்கோவா, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
………….
பெண்கள் ஒற்றையர் பிரிவு மற்றொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் டோர்மோ ஆனியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில், முதல் செட்டை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-1 என எளிதாக கைப்பற்றினார்.
ஆனால் இரண்டாவது செட்டில், இரசிகர்கள் அதிர்ச்சியடையும் வகையில், சாரா சொரிப்ஸ் டோர்மோ, ஸ்லோன் ஸ்டீபன்ஸ்க்கும் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நீண்டது.
எனினும் நெருக்கடிகளை தவிடுபொடியாக்கிய ஸ்லோன் ஸ்டீபன்ஸ், செட்டை 7-6 என கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
………………
பெண்கள் ஒற்றையர் பிரிவு இன்னொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் கர்பீன் முகுருசா , சுவீடனின் ஜோஹன்னா லார்சன்னை எதிர்த்து விளையாடினார்.
இதில் சிறப்பாக விளையாடிய கர்பீன் முகுருசா, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.