பிரபல அருங்காட்சியகத்தில் கறுப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை
அமெரிக்காவில் பிரபல ஓவிய கலை மியூசியத்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டபோது கருப்பின மாணவர்களுக்கு சில தடைகள் விதிக்கப்பட்டன.
அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் உள்ளது புகழ்ப்பெற்ற ஓவிய கலை அருங்காட்சியகம். இங்கு நாள்தோறும் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள் வருகை தந்து பார்வை இடுவது வழக்கம்.
பழமை வாய்ந்த இந்த மியூசியத்தில் கடந்த வாரம் சார்ட்டர் பள்ளியின் மாணவ, மாணவிகள் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் அப்பள்ளியின் ஆங்கில பாடப்பிரிவு ஆசிரியை லேமி உடன் சென்றுள்ளார். இப்பள்ளியில் கருப்பின மாணவர்களே பயில்கின்றனர்.
அதே சமயம் மற்றொரு பள்ளியின் மாணவ, மாணவிகள் சுற்றிப்பார்க்க மியூசியம் வந்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளியில் பயில்கின்றனர். இரு பள்ளிகளின் மாணவர்களும் சுற்றி பார்க்கும்போதே அங்கு இருந்த பாதுகாவலர், மியூசியத்தின் ஊழியர்கள் என அனைவரும் சார்ட்டர் பள்ளியின் ஆசிரியை மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்தனர்.
இது குறித்து மாணவர்களுடன் சென்ற சார்ட்டர் பள்ளியின் ஆசிரியை லேமி தனது பேஸ்புக் பக்கத்தில், ‘மியூசியத்தை சுற்றி பார்க்கும்போது என் மாணவர்கள் சில பொருட்களின் மேற்பரப்பில் போடப்பட்ட கண்ணாடிகளில் கை வைத்தனர். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர், கையில் இருந்த கம்பினால் தொடக்கூடாது என மாணவர்களிடம் அதட்டிக் கூறி தடுத்துக் கொண்டே இருந்தார். என்னையும் மரியாதையாக நடத்தவில்லை.
ஆனால், மற்றொரு பள்ளி மாணவர்கள் பல முறை பொருட்களை தொட்டும் ஏதும் சொல்லவில்லை. ஒரு மாணவன் தண்ணீர் குடிக்க சென்றான். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர், உள்ளே தண்ணீர், உணவு, குளிர்பானம் என எதற்கும் அனுமதி இல்லை என்று என் பள்ளி மாணவர்களிடம் கூறினார்.
இவற்றை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், என் மாணவர்களின் மனம் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை நான் பார்த்தேன். என்னுடன் வந்த 13 வயது மாணவன் என்னிடம் கோபித்துக் கொண்டு வெளியேச் சென்றுவிட்டான்’ என கூறினார்.
இது குறித்து அந்த மியூசியத்தின் பொறுப்பாளரிடம் லேமி புகார் கொடுக்கவே, இது போன்ற இனவெறி செயல்பாடுகள் மியூசியத்தில் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். பாதுகாவலர் மற்றும் ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படும் என கூறினார். மேலும் அப்பள்ளி மாணவர்கள் மீண்டும் வந்து பார்வையிட டிக்கெட்டுகளும் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.