பாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் : ஜனாதிபதியின் உரை
எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களற்ற பாதுகாப்பான நாடாக உருவாக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதியின் அந்த உரையின் முழு விபரம் வருமாறு :
இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் தலைவராக உங்களுக்கு உரைநிகழ்த்தும் இவ்வாய்ப்பானது நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்நாட்டின் மக்கள் வழங்கிய வரலாற்று மிக்க வெற்றியினாலேயே எனக்குக் கிடைத்துள்ளது.
அமைதியானதும் அத்துடன் நியாயமானதுமான தேர்தல் ஒன்றிற்காகத் தம்மை அர்ப்பணித்த அனைத்துப் பிரஜைகளுக்கும், நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நான் இவ்வேளையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ் உயர் சபையில் அமர்ந்திருக்கும் நீங்கள் எக்கட்சியைச் சேர்ந்தவராகவிருப்பினும் இந்நாட்டு மக்களது நலன் கருதி சேவையாற்றுவது எம் அனைவரதும் அடிப்படைப் பொறுப்பாகும். நான் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இந்நாட்டின் இராணுவ அதிகாரியொருவராகவும், பத்து வருடங்களுக்கு அண்மித்த காலம் இந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் சேவையாற்றினேன்.
நான் முனைப்பான அரசியலில் ஈடுபட்டிராவிடினும் மக்கள் சேவை யாதென்பது பற்றி நான் சிறிய வயதிலிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். எனது தந்தையின் மூத்த சகோதரரான டி.எம்.ராஜபக்ஷ 1936 ஆம் ஆண்டில் அரசப் பேரவையில் அம்பாந்தோட்டை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததுடன், 1945 ஆம் ஆண்டில் அவர் காலமான பின்னர் அம்பாந்தோட்டை மக்கள் எனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷ அரச பேரவைக்காகத் தெரிவு செய்தனர். அதன்பின் அவர் மக்கள் வாக்கினால் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
அன்று தொடக்கம் இற்றைவரைக்கும் உறுகுணை கிருவாபத்துவையின் கிராமப்புறமான மெதமுலனயை அடிப்படையாகக் கொண்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த ராஜபக்ஷவினர் வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாகச் சேவையாற்றியுள்ளனர்.
இக்காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், உப சபாநாயகர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமராக மட்டுமல்லாது ஜனாதிபதிகள் இருவர்களாகவும் எங்கள் மீது நம்பிக்கை வைத்த இந்நாட்டின் பொதுமக்கள் எம்மை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அன்று உறுகுணையின் சிங்கமாக அழைக்கப்பட்ட டி.எம்.ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகைதந்த முதல் நாளிலிருந்தே குரக்கன் நிறமான சால்வையொன்றை அணிந்திருந்தார்.
அவர் கிருவாபத்துவையின் குரக்கன் செய்கைபண்ணும் விவசாயிகளையே அந்தச் சால்வையின் மூலம் அடையாளப்படுத்தினார். டி.எம்.ராஜபக்ஷவின் பின் எனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷ அவரின் பின் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் இந்தக் குரக்கன் நிறமான சால்வையை அணிந்திருந்தனர்.
நான் அந்தச் சால்வையை அணியாதிருப்பினும் இந்நாட்டின் கஷ்டத்திற்குள்ளான மக்கள் சார்பில் என்றென்றும் தம்மை அர்ப்பணித்த குரக்கன் சால்வையினால் அடையாளப்படுத்துகின்ற அந்த ஆழமான தத்துவத்தையே நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன்.
அத்தத்துவம் ஜனாதிபதி தேர்தலுக்காக நான் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடங்கியிருக்கிறது.
2019 நவம்பர் மாதம் 16 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலில் இந்நாட்டு மக்கள் எனக்கு மிகத் தெளிவானதொரு மக்கள் வரத்தினை பெற்றுக் கொடுத்தனர். என் மேல் வைத்த மிகுந்த நம்பிக்கையைக் கொண்டே அவ் வரத்தினை எனக்கு வழங்கினர். அந்நம்பிக்கையை எவ்வகையிலும் மீறாது நாம் உறுதியளித்த அதேவாறு மக்களுக்காகச் சுபீட்சமானதொரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு நானும் எனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
எனக்கு வாக்களித்த மக்களுக்கு இந்நாட்டு அரசியல் கலாசாரத்தில் பாரியதொரு மாற்றத்தைச் செய்யவே தேவையேற்பட்டு இருந்தது. குறிப்பாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல்ரீதியான நிகழ்ச்சி நிரலை மக்கள் நிராகரித்தனர்.
மேலும் அரசர்களை உருவாக்கும் வகிபாகத்தை நடித்துக் கொண்டு நாட்டின் அரசியலை வழிநடாத்துவதற்கு எவருக்கும் சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாது என்பதை பெரும்பான்மை மக்கள் நிரூபித்தனர்.
இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நான் அழைப்புவிடுக்கின்றேன் கடந்த காலத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு நடாத்திய அரசியலைத் தற்போதாவது கைவிட்டு மக்களிடையே பேதங்களை விதைப்பதற்குப் பதிலாக ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றுசேருமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.
பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் என்றும் மதிக்க வேண்டும். அப்போதுதான மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியும்.
எமது நாட்டின் உன்னதமான அரசியல் யாப்பின்படி எனது பதவிக்காலத்தினுள் நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் என்றும் புத்தசாசனத்தைப் பாதுகாத்து போஷிப்பேன் என்றும் அதேபோன்று எந்தவொரு பிரசையும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை எப்போதும் காப்பேன் என்றும் இதன்போது வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
சிறுவயதில் எனது தந்தையார் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எனது ஞாபகத்திலுள்ளது. நான் பெரும்பாலும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரியில் இருந்து பாராளுமன்றச் செயற்பாடுகளைக் கண்டு களித்துள்ளேன். கடந்தகாலத்தில் நாங்கள் கண்ட பாராளுமன்றம் மிகவும் முன்மாதிரியான இடமாக இருந்தது. இதில் மிக முக்கிய கருத்துமிக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன. மிகத் தர்க்கரீதியான வாதவிவாதங்கள் இடம்பெற்றன. பாடசாலைப் பிள்ளைகளைப் போன்று மூத்தவர்களும் அவற்றைப் பார்க்கும், செவிமடுக்கும் ஆசையுடன் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர். பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள உறுப்பினர்கள் எல்லா வகையிலும் முயற்சித்தனர்.
மக்கள் அன்று பாராளுமன்றத்தை மதித்தனர். மக்கள் பிரதிநிதிகளை மதித்தனர். எனினும் பிற்பட்ட காலங்களில் இந்த மரியாதை படிப்படியாக குறைந்து போயிற்று.
இந்தப் பாராளுமன்றம் மீண்டுமொருமுறை மக்களின் உண்மையான பிரச்சினைகளை கலந்துரையாடும், தேசியக் கொள்கைகளை விவாதிக்கும் சட்டவாக்கத்துறையின் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றும் முன்மாதிரியானதொரு இடமாக மாற்றப்பட வேண்டும். பாராளுமன்றத்தை மக்களின் மதிப்பை வென்றெடுக்கும் ஒரு இடமாக மாற்றியமைக்கும் அடிப்படைப் பொறுப்பு இங்கிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளிடமே தங்கியுள்ளது.
இன்று இந்நாட்டில் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் கழிந்த பின்னரும்கூட இந்நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் நாம் திருப்தியடைய முடியாது.
இந்நிலைமையை மாற்றியமைக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. அது சார்பில் தேவையான அர்ப்பணிப்புக்களைச் செய்வதற்கு நாம் தயாராக வேண்டும். மக்கள் பிரதிநிதி ஒருவரின் அடிப்படைப் பொறுப்பாவது மக்களுக்குச் சேவையாற்றுவதேயாகும்.
எமக்குக் கிடைத்துள்ள பதவிகள் சிறப்புரிமைகள் அல்ல அவை பொறுப்புக்கள் என்பதை நாம் அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நாடொன்றை முன்னேற்றுவதற்காகச் சீரான தொலைநோக்கும், திட்டங்களும் தேவைப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டின் மக்களுக்கு அறிமுகப்படுத்திய எனும் கொள்கைக் பிரகடனமானது சுமார் 4 வருடங்களுக்குக் கிட்டிய காலமாக ‘வியத் மக’ போன்ற தேசிய அமைப்புக்களூடாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தினூடாகவும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் நிகழ்த்திய விவாதங்களூடாகவும் மக்களது கருத்துக்களைப் பெற்றுக்கொண்டும் எனது நோக்கையும் அதில் சேர்த்துக் கொண்டும் தயாரித்த தேசிய வேலைத்திட்டமாகும்.
அத் திட்டத்திற்கமைய மக்களுக்குச் சுமையாகவிருந்த வரிச்சுமையை தளர்த்தல், வெளிப்படைத் தன்மை மற்றும் வினைத்திறமையுடன் கூடிய உயர்ந்த நிருவாகத் திறமுறையை ஆரம்பித்தல், வீணான அரசாங்கச் செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளல் போன்ற பல நடவடிக்கைகளைத் தற்போது நாங்கள் எடுத்துள்ளோம்.
எமது கொள்கைகளினிடையே தேசியப் பாதுகாப்புக்காக உச்சக் கட்ட முன்னுரிமை கிடைக்கின்றது. தேசியப் பாதுகாப்புப் பொறிமுறையை மீண்டும் வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். திறமை வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பொறுப்புக்களை கையளித்துள்ளோம். தேசியப் பாதுகாப்புக்கான பொறுப்புடைய முப்படைக்கும், பொலிசாருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். தேசிய உளவுப் பிரிவு வலையமைப்பை மறுசீரமைத்து வலுப்படுத்தியுள்ளோம்.
எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களற்ற பாதுகாப்பான நாடாக உருவாக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
எமது அடிப்படை நோக்கமானது உற்பத்திப் பெருக்கமுள்ள ஒரு பிரஜை, மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற குடும்பம், ஒழுக்கம் மிக்க சமூகம் மற்றும் சுபீட்சமான ஒரு தேசத்தை உருவாக்குவதேயாகும்.
இந் நாட்டில் வாழுகின்ற, வேலை செய்யக்கூடிய வயதிலுள்ள ஒவ்வொரு ஆரோக்கியமான பிரஜையையும், சமூகத்திற்கு உழைக்கக் கூடிய உற்பத்திப் பெருக்கமிக்க பிரஜையாக மாற்றுவதில் அரசு முன்னின்று செயற்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் இந்நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்கச் செய்வதே எமக்குத் தேவையாகிறது.
அபிவிருத்திச் செயற்பாடுகளின் நன்மைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரப்படுவதில் நாங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். அதேபோன்று நாட்டு மக்களின் தேவைகள் உண்மையாகவே நிறைவேற்றப்படுகின்றனவா, அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக புதிய திறமுறையொன்றையும், சுட்டிகளையும் பயன்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கான மக்களின் பதிலை ஆராய்வதற்காகத் தேர்தல் வரும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு அனைவரதும் ஆதரவு எமக்குத் தேவைப்படுகிறது.
கடந்த நாட்களில் நாங்கள் வியாபாரத்துறைக்காக வழங்கிய வரிச்சலுகைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கமைய வரிகள் குறைக்கப்பட்ட ஒவ்வொரு பண்டத்தினதும், ஒவ்வொரு சேவையினதும் குறிப்பிட்ட விலை குறைக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
வறுமையை ஒழிப்பது எமது அரசாங்கத்தின் முன்னுரிமையாகக் கருதுகின்றோம். அதற்காக நாங்கள் மக்கள் ஏழைகளாவதற்கான காரணங்களைப் புரிந்து கொண்டு அவற்றிற்குத் தீர்வுகளை வழங்க வேண்டும். தகுந்த கல்வியோ அல்லது திறமையோ இல்லாமை, பயிரிடுவதற்குக் காணிகள் இல்லாமை, சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மூலதனம் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும் நடைமுறை சாத்தியமான அணுகுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம்.
எதிர்வரும் மாதத்தில் இந்நாட்டின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு நாம் திட்டம் வகுத்துள்ளோம். அரச துறையையும், தனியார் துறையையும் ஒன்றிணைத்துக்கொண்டு தொழிலின்மைக்காகப் நடைமறை சாத்தியமான தீர்வுகளை முன்வைப்பதற்கு எமது அரசாங்கம் தயாராகவுள்ளது.
குணநலமிக்க, சட்டத்தை மதிக்கும், ஒழுக்கப் பண்பாடுடைய சமூகத்தை உருவாக்குவோம் என்பது கடந்த தேர்தலின்போது எமது தொனிப்பொருளாக இருந்தது. மக்கள் அதற்காக எமக்கு வரமொன்றை அளித்துள்ளார்கள்.
எமது நாடு மிகவும் பண்டையகால வரலாற்றுமிகுந்த பௌத்த தத்துவத்தைப் போன்று உலகினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல மத போதனைகளினால் போஷிக்கப்பட்ட சமூகம் வாழும் நாடாகும். எமது விழுமியங்களையும், கலாசாரங்களையும் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். இலங்கையை அபிவிருத்தியடைந்ததொரு நாடாக உருவாக்குவது எமது இலக்காகும். அது இறைமையான, சுதந்திர நாடாதல் வேண்டும். அதேபோன்று அது பாதுகாப்புமிக்க அமைதியான நாடாதல் வேண்டும். இவ் அனைத்துப் பிரிவுகளும் நிறைவுபெறுமிடத்தே இலங்கை உண்மையிலேயே சுபீட்சமானதொரு நாடாகும்.
ஒவ்வொரு பிரஜைக்குமாக ஏற்றுக் கொள்ளத்தக்க மட்டத்திலான பொருளாதார நிலைப்பாட்டை உறுதிப்படுத்துதல், முன்னேறுவதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்புக்களை வழங்குதல், மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட தூய்மையான அத்துடன் வினைத்திறன்மிக்க அரச சேவையை உறுதிப்படுத்தல் மற்றும் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாத்து அவர்களை வலுவூட்டுதல் அதன் முக்கிய நோக்கமாகும்.
மக்களை மையமாகக்கொண்ட பொருளாதாரத்தினை வெற்றிகரமாகத் தாபிப்பதாயின் அரசாங்கத்தின் உச்சக் கட்ட உத்தியோகத்தர்கள் தொடக்கம் குறைந்தபட்ச உத்தியோகத்தர் வரை நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக எமது நோக்கு மற்றும் நோக்கங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போது அவர்களின் கடமைகளை மிகவும் செயற்திறனான முறையில் நிறைவேற்றலாம்.
ஊழல்கள் மற்றும் மோசடிகளைப் புறக்கணிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நாங்கள் செயற்படுத்த வேண்டியுள்ளது. ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நாங்கள் அந்தஸ்த்தைக் கருதாது சட்டத்தை விரைவில் செயற்படுத்தவுள்ளோம்.
நன்றி வீரகேசரி