Main Menu

பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானியே காரணம்- முதற்கட்ட விசாரணையில் தகவல்!

பாகிஸ்தானின் லாகூரில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் இன்ரர்நசனல் எயார்லைன்ஸிற்குச் (Pakistan International Airlines) சொந்தமான விமானமே விபத்துக்குள்ளான நிலையில் விபத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடந்தப்பட்டு வந்தது. மேலும், விமானத்தில் தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது விபத்து தொடர்பாக நடந்த விசாரணையின் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த தகவல்படி, “விமானியும் விமானக் கட்டுப்பாட்டாளரும் வழக்கமான விதிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் இருவரும் விமானத்தைக் கவனிக்காமல் கொரோனா வைரஸ் குறித்தே உரையாடிக் கொண்டிருந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில் எந்தக் குறைபாடும் இல்லை. அந்த விமானம் நூறு வீதம் பறப்பதற்குத் தகுதியானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த மாதம் லாகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் புறப்பட்டுச் சென்ற பாகிஸ்தான் இன்ரர்நசனல் எயார்லைன்ஸின் விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது தொடர்பாடல் தொடர்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 20இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் விமான விபத்தில் 97 பேர் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares