பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இது தென்னாபிரிக்கா அணி சொந்த மண்ணில் கைப்பற்றும் 7ஆவது தொடராகும்.

கேப்டவுணில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஒலிவியர் 4 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெயின் 3 விக்கெட்டுகளையும், கார்கிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், வெரோன் பிளெண்டர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, பதிலுக்கு முதலாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 431 ஓட்டங்களை குவித்தது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக டு பிளெஸிஸ் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் ஆமிர் மற்றும் சயீன் அப்ரிடி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பிறகு 254 ஓட்டங்கள் பின்னிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் 40 ஓட்டங்கள் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில், பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக அசாட் சபீக் 88 ஓட்டங்களையும், பாபர் அசாம் 72 ஓட்டங்களையும், ஷான் மசூத் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் டேல் ஸ்டெயின் மற்றும் ரபாடா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 40 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 9.5 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டு பிளெஸிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 11ஆம் திகதி ஜோகனஸ்பேர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !