பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அணி டேவிஸ் டென்னிஸ் உலக கிண்ண தொடருக்கு தகுதி!
டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குழு-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.
இதில் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார், பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ராம்குமார் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் முகமது சோகைப்பை தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். இதில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் ஹூஜைய்பா அபதுல் ரகுமானை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் – ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இரட்டயர்களை சந்தித்தது. இதில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
மாற்று ஒற்றையர் ஆட்டத்தின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் பாகிஸ்தானின் யூசுப் கலீல் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த போட்டியில் 6-1, 6-0 என்ற கணக்கில் சுமித் நாகல் அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் டேவிஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகத் தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா முன்னேறியது.
இதனிடையே, லியாண்டர் பயஸ், அறிமுக வீரர் ஜீவன் நெடுஞ்செழியனுடன் தனது 44 வது இரட்டையர் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தனது சொந்த சாதனையை மேம்படுத்தினார்.
அத்துடன் 2020 மார்ச் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள டேவிஸ் உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள குரேஷியாவை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...