Main Menu

டென்னிஸுக்கு மீண்டும் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் ஹோபார்ட் சர்வதேச போட்டியின் மூலம் மீண்டும் டென்னிஸுக்குத் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா, கடந்த ஆண்டு ஒக்டோபரில் இஷான் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது மகப்பேற்று விடுப்புக்கு பின்னர் டென்னிஸ் களத்திற்கு திரும்ப விரும்பவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., ஹோபார்ட் டென்னில் தொடரில் விளையாடவுள்ளதுடன், அதைத் தொடர்ந்து அவுஸ்ரேலிய ஓபனிலும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 33 வயதான சானியா மிர்சா இறுதியாக 2017 ஒக்டோபரில் இடம்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார்.

இந்த நீண்டகால இடைவேளியால் ஹோபார்ட் சர்வதேச போட்டியில் அவர் உலக தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள உக்ரைனைச் சேர்ந்த நாடியா கிடெனோக்குடன் அணி சேருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் கலப்பு இரட்டையர் போட்டியில் சானியா இணைந்து விளையாடவுள்ளார்.

அதற்கு முன்னதாக அடுத்த மாதம் மும்பையில் நடைபெறும் ITF Women’s tournament போட்டிகளிலும் விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் விளையாடுவது அவரது மணிக்கட்டு காயத்தைப் பொறுத்தது என்று அவர் கூறியுள்ள போதும், நிச்சயமாக ஹோபார்ட் மற்றும் அவுஸ்ரேலிய ஓபனில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா, தான் தற்போது முழு உடல்தகுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து வௌியிடுகையில், “நீங்கள் ஒரு தாயாக மாறும்போது பல மாற்றங்கள் காணவேண்டி உள்ளது. உங்கள் வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் தூக்க முறையும் மாறுகின்றது.

இருப்பினும் நான் இப்போது பொருத்தமாக இருப்பதாக உணர்கிறேன், என் உடல் இப்போது என் குழந்தையின் பிறப்புக்கு முன்பு இருந்தது போல் தேறியுள்ளது. ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பு எனது ஓய்வு குறித்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் தற்போது அந்த எண்ணம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்கிற்கான வாய்ப்பினை பெற முயற்சிப்பதாக சானியா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “நான் மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளேன், கடந்த முறை துரதிர்ஷ்டத்தால் எங்களால் பதக்கம் வெல்ல முடியவில்லை.

நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க முயற்சிப்பேன், ஒலிம்பிக்கிற்கு முன்பு மூன்று கிராண்ட்ஸ்லாம்களில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...