நடிகர் சங்க கட்டிடத்திற்காக நாடகங்களில் நடிக்கப் போகும் ரஜினி – கமல்?
நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக நடத்தப்படும் நாடகத்தில் இணைந்து நடிப்பதாக ரஜினி, கமல் உறுதியளித்துள்ளதாக அச்சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ஆவது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க கட்டடத்துக்கு நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளதாக கூறினார். மேலும் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால், நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதன் சுமை அதிகரித்துள்ளதாக கார்த்தி தெரிவித்தார். கடன் தர 50 சதவீத வைப்பு நிதி வைக்க வேண்டும் என வங்கி வலியுறுத்தியதாகவும், அதனை திரட்டுவதற்கு 4 மாதம் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் எந்த திருமண மண்டபத்திலும் இல்லாத அளவில் நடிகர் சங்க கட்டிடத்தில் 100 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளதாகவும் கார்த்தி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்று இணைந்து நடிக்க உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண் கலைஞர்கள் பாலியல் புகார்களை தருவதற்காக பிரத்யேக மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக நடிகை ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கார்த்தி கூறினார்.