தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் மேகநாத் தேசாய்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், எழுத்தாளருமான, மேகநாத் தேசாய், பிரித்தானியாவின் எதிர்க்கட்சி தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கட்சிக்குள் தலைதூக்கிய இனவெறியை தடுப்பதில் கட்சி தலைமை தோல்வி அடைந்துவிட்டதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கட்சி தலைமை கேட்டுக்கொண்ட போதிலும், அவர் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.
80 வயதான மேகநாத் தேசாய் இதுகுறித்து கூறுகையில், ‘இதுவரை தொழிலாளர் கட்சியின் ஆதரவாளராக மட்டுமே இருந்தேன். ஆனால், கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர் 19 நாட்கள் பணிநீக்கம் நடவடிக்கைக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டார். இதனால் 49 ஆண்டுகளுக்கு பிறகு நான் கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எந்த மன்னிப்பும் இல்லாமல் அவரை திரும்ப கட்சியில் அனுமதித்தது மிகவும் விசித்திரமான முடிவு. கட்சியில் இனவெறி புகுத்தப்பட்டது. எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. யூத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். பெண் உறுப்பினர்கள் கேலி செய்யப்பட்டனர்’ என கூறினார்.